பாடல்:
' கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.'
- குறள் எண்: 391.
பொருள்:
' கற்க வேண்டியவற்றை பிழையின்றிக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் கற்றவாறு நடந்துகொள்ளவேண்டும் அல்லது வாழவேண்டும்.'
தவறுகள்:
வள்ளுவர் கூறும் 'நிற்க' என்ற சொல்லுக்கு 'நடந்துகொள் அல்லது வாழ்' என்று பொருள் கூறி இருப்பது முரணான கருத்தாகும். ஏனென்றால் இந்த இரண்டு வினைகளும் (நடந்துகொள்ளுதல், வாழ்தல்) நிற்றல் வினையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது நாமறிந்த உண்மை. கற்றவாறு வாழவேண்டும் என்று கூறுவதே வள்ளுவரின் நோக்கம் என்றால் 'நிற்க' என்ற சொல்லுக்குப் பதிலாக 'இயலுக' அல்லது 'செய்க' என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தி இருப்பார். இவற்றைப் பயன்படுத்தாததில் இருந்து வள்ளுவர் கூற வரும் கருத்து இது அல்ல என்பது தெளிவாகிறது. அன்றியும் இந்த அதிகாரத்தில் கல்வியின் சிறப்பைத் தான் வள்ளுவர் கூற வருகிறாரே அன்றி 'இப்படி நட, அப்படி நட' என்று அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த அதிகாரத்தில் உள்ள ஏனைய பாடல்களில் இருந்து இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
இங்கே ஒரு கருத்தை நாம் ஆராய வேண்டும். ஒரு நூலைக் கற்பவர் அதன்படி தான் நடக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறுவாரா? ஒருபோதும் கூறமாட்டார். அப்படி கூறினால் அது பெரும் பிழையாகி விடும். ஏனென்றால் அது கற்போரின் சுதந்திரத்திற்குத் தடைவிதிப்பது போலவும் கற்றலை அஞ்சத் தக்கதாகவும் செய்வதுடன் வாழ்வியல் நூல்கள் (இவற்றை மட்டும் தானே பின்பற்ற முடியும்) தவிர ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்கக் கூடாது என்று விலக்கி வைப்பது போலவும் ஆகி விடும். வள்ளுவர் போன்ற பெருந்தகையாளர்கள் இத்தகைய கருத்தை ஒருபோதும் மக்களுக்குக் கூறமாட்டார்கள். எனவே 'வாழவேண்டும் அல்லது நடந்துகொள்ளவேண்டும்' என்று பொருள் கூறி இருப்பது முற்றிலும் தவறானது என்று அறியலாம்.
திருத்தங்கள்:
ஆராய்ந்து பார்த்ததில் இக்குறளின் இரண்டாம் அடியில் உள்ள மூன்றாவது சீரில் ஒரு எழுத்துப் பிழையால் தான் இக்குறளுக்குத் தவறான பொருளைக் கூறி உள்ளனர் என்று தெரிய வந்தது. 'தக' என்று இருக்க வேண்டிய இடத்தில் 'தாக' என்று இருக்க வேண்டியதே திருத்தம் ஆகும். இனி இரண்டாம் அடியினை கீழ்க்காணுமாறு திருத்தி எழுதி சீர் பிரிக்கலாம்.
'நிற்க அதற்குத் தாக' = 'நிற்க அதன் குத்து ஆக'
'அதன் நினைவாய் (ஞாபகமாய்) இருக்க' என்பதே இந்த அடியின் பொருள் ஆகும். நிற்றல் என்பது ஓரிடத்து இருத்தல் என்னும் பொருள்படுவதால் இருக்க என்னும் பொருளை உணர்த்த நிற்க என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இது சரியே ஆகும். இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து என்ன என்று பார்ப்போம். ' கற்க வேண்டியவற்றை பிழையின்றிக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் அதன் நினைவாய் இருக்கவேண்டும் (மறந்துவிடக் கூடாது).'
நிறுவுதல்:
வள்ளுவர் 'குத்து' என்ற சொல்லை இங்கே 'நினைவு' என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். இதே பொருளில் இன்னொரு இடத்திலும் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.' - குறள் -490.
இங்கே குத்து என்ற சொல் 'பிடித்தல்' 'கொள்ளுதல்' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இதே பொருளில் தான் இச் சொல்லை கல்வி அதிகாரத்தில் பயன்படுத்தி இருக்கிறார். 'கற்றவற்றைக் கொள்ளுதல்' என்றால் 'நினைவில் இருத்துதல்' என்று தானே பொருள்?. இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தானே. வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும்?. எது நினைவில் உள்ளதோ அதுவே பயன் தரும். நினைவில் இல்லாதது பயன் அளிக்காது. ஒருமுறை கற்றதை பலமுறை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அது நினைவில் இருந்து அகன்று விடும். எனவே தான் வள்ளுவர் 'கல்வியைக் கசடறக் கற்கவேண்டும்; கற்றபின் அதன் நினைவாய் இருக்க வேண்டும்.' என்று கூறுகிறார். இதுவே இக்குறளின் மூலம் வள்ளுவர் கூற வரும் கருத்து ஆகும். குத்துதல் என்பதை ஒன்றின் நகலை இன்னொன்றின் மேல் ஏற்றுதல் என்னும் பொருளில் இன்று நாம் பயன்படுத்துகிறோம். முத்திரை குத்துதல் என்னும் சொற்றொடரில் குத்துதல் உணர்த்தும் பொருள் 'ஏற்றுதல்' என்பது தானே?. இது பொருள் விரிவு முறையில் உண்டானது ஆகும்.
சரியான பாடல்:
' கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தாக.'
--------------------------------------வாழ்க தமிழ்!-------------------------------------------