வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இன்றைய குறள்:-

Saturday, January 31, 2009

' தொட்டனைத் தூறும் மணற்கேணி'


' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.'

- கல்வியின் சிறப்பினைக் கூறும் அற்புதமான குறள் இது. ஆனால் இதன் பொருளைக் கூறுமிடத்து சற்று அவசரப்பட்டு இருக்கிறார்கள். இதன் பொருளாகக் கூறப்படுவதாவது: ' தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே மாந்தர்க்கு அறிவு ஊறும்.' என்பது ஆகும்.
குறளை மேலோட்டமாகப் பார்த்தால் மேற்கூறிய பொருளே கொள்ளத் தோன்றும். ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அது தவறு என்று புலப்படும்.
சரியான பொருள் என்ன என்று காணும் முன்னர் இப்பொருளில் உள்ள தவறு என்ன் என்று பார்ப்போம்.

வள்ளுவர் இக்குறளில் 'நீர்' என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை. அதை நாமாகக் கூட்டிப் பொருள் கொண்டுள்ளோம். வள்ளுவர் கூறவந்த பொருள் இதுதான் என்றால் அவர் 'மணற்கேணி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'நீர்க்கேணி' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை பயன்படுத்த வில்லை. அதுமட்டுமல்ல, மணற்கேணியைத் தோண்டினால் நீர் வரும் என்பது எழுதப்படாத விதியா என்ன?. எல்லா மணற்கேணிகளிலும் தோண்டினால் நீர் வருவதும் இல்லை. எனவே வள்ளுவர் நீர் என்ற பொருளை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்திருப்பார் என்று சொல்லவும் முடியாது. ஆக இப்பாடலுக்கும் நீருக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவாகிறது.

நீருக்குத் தொடர்பில்லை என்றால் 'அறிவு' என்னும் பொருளை வள்ளுவர் எதனுடன் இங்கே ஒப்பிடுகிறர்ர்?. நிச்சயம் மணற்கேணியுடன் தான். ஏனென்றால் அதைத் தவிர இப்பாடலில் வேறொரு பொருள் கூறப்பட வில்லை. அதுமட்டுமின்றி, இப்பாடலில் 'தூறும்' என்ற சொல் மணற்கேணிக்கும் அறிவுக்கும் ஒப்பீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது மிக முக்கியமானது.

'நீர்' என்ற பொருளை வலிந்து கொள்வதற்காக 'தொட்டனைத் தூறும்' என்ற தொடரை 'தொட்டனைத்து ஊறும்' என்று பிரித்துத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள் 'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான 'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?. தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால் இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும். ' தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு அறிவு ஆழமாகும்'.

நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும் கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான் ஆழமாகவே இருக்கும். அத்துடன் நிலக்கேணியைப் போலன்றி மணற்கேணியைத் தோண்டுவதும் எளிதே ஆகும். அதனால் தான் வள்ளுவர் நிலக்கேணியைக் கூறாமல் மணற்கேணியை அறிவுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இந்த மணற்கேணியைப் போலத்தான் நமது அறிவும். கல்வி கற்பது என்பது எளிதான செயலே ஆகும். ஆனால் காலத்தின் தேவைக்கேற்ப நல்ல நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தால் தான் நமது அறிவு மூடிக்கொள்ளாது இல்லையேல் மணற்கேணி போல அறிவு மூடிக்கொள்ள நாம் 'மூடனாகி' விடுவோம். அத்துடன் நாம் கற்கின்ற அளவே நமது அறிவின் ஆழமும் இருக்கும். இக்காலத்துச் சொல்லாடலான ' உனக்கு மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது?' என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் மூடிப்போன அறிவினைத் தான்.

இதில் இருந்து சரியான திருக்குறள் என்ன என்று நீங்களே ஊகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அது இதுதான்.

' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து தூறும் அறிவு. '

------------------------------------------வாழ்க தமிழ்-------------------------------------

No comments:

Post a Comment