தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.
' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.
எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்கவேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும் என்னும் ஆவலில் ஏற்பட்டது தான் இந்த ஆய்வு.
பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் ' இளையோரை வழிநடத்துதல்' ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவை பல பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். 'தவறுகளைச் செய்யாதே' என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே ஒழிய ' தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு' என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இனி இப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.
அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
' கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.
இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:
' களவும் கவறு மற.'
(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)
பி.கு: சூதாடும் இடத்தைக் குறிக்கின்ற 'கழகம்' என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் பல தங்களது பெயருடன் இணைத்து வைத்துள்ள நோக்கம் என்னவோ?. சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.
-----------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------
அருமையான விளக்கம்
ReplyDeleteநன்றிங்க
அய்யாவுக்கு வணக்கம்,
ReplyDeleteமிக ஆழமான விளக்கம்.இதே தலைப்பில் சனவரி'30 ல் ஒரு விளக்கததை நான் எனது இழையில் பதிவு செய்திருக்கிறேன்.தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
வள்ளுவனையும்,கம்பனையுமே திருத்தும் தாங்கள் சமகாலத்தில் உள்ளவர்களின் மற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்ப்பது தவறுதான்
ReplyDelete////சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.////
தங்களின் இந்த பொதுவான கருத்துக்கு எந்த வகையான சான்று வைத்திருக்கிறீர்கள்?
கழகத்தின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.அப்படி என்றால் தங்களுக்குப் புரியாத சில சங்கதிகளும் உண்டு என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே!
ஐயா பெயரில்லாதவரே! பின்குறிப்பில் நான் நக்கலாகச் சொன்னதற்கெல்லாம் சான்றுகள் வேண்டும் என்று கேட்டால் நான் எங்கே போவேன்?. நான் திருத்தியது வள்ளுவரை அல்ல. நம் மக்கள் அவர் எழுதிய குறளில் செய்த தவறுகளை. சரி, கம்பர் எங்கிருந்து வந்தார்?. இன்னும் அதை நான் கையில் தொடவில்லையே!. தயவுசெய்து உங்கள் முகம் காட்டுகிறீர்களா?
ReplyDeleteகளவும் கத்தும் மற - கத்து என்றால் சூது என்றும் களவும் சூதும் மற என்று பொருள் என்றும் எங்கோ படித்த ஞாபகம்.
ReplyDeleteஎன்கருத்து.
ReplyDelete"கசடறக் கல்" என்பதின் மூலம் வள்ளுவர் உனக்கு தவறு ( களவு) என்பதை அற்று பிறதைக் கல் என்றார். ஆனால் சில விஷயங்கள் நாம் தவறு என்பதை அறியாமலேயே கற்கிறோம். "களவும் கற்று மற" என்பது கற்றது களவென தெரிந்தபின் அதை மற எனப்போருளாகும் என்பது என் தாழ்மையான கருத்து.
கிருஷ்ணமாச்சாரி அவ்வை தமிழ்ச் சங்கம்
எனப்போருளாகும் என்பதை " எனப் பொருளாகும். " என்று படிக்கவும். தவறுக்கு வருத்தங்கள்
ReplyDeleteகிருஷ்ணமாச்சாரி அவ்வை தமிழ்ச் சங்கம்