வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இன்றைய குறள்:-

Friday, May 8, 2009

பசப்பு என்றால் என்ன?


பசப்பு என்றால் என்ன?

முன்னுரை:
பசப்பு என்ற சொல் சங்க காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச் சொல்லுக்கு நாம் கொண்டிருக்கும் பொருள் தான் தவறாக உள்ளது. இச் சொல்லின் உண்மையான பொருள் பற்றியும் அது எவ்வாறெல்லாம் திரிந்து வேறுபல பொருட்களுக்கு இடமளித்தது என்பது பற்றியும் இக் கட்டுரையில் காணலாம்.

சொல்வடிவங்கள்:
பசப்பு என்ற சொல் இலக்கியங்களில் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

பசலை, பசப்பு, பசத்தல்

இந்த மூவகை வடிவங்களும் ஒரு பொருளையே குறித்து வந்துள்ளன.

அகராதிப் பொருள்:
தமிழ் அகராதிகள் பசப்பு என்ற சொல்லின் வடிவங்களுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி (பசப்பு): பாசாங்கு, பச்சை நிறம், பெண்களின் ஒருவித மேனி அழகு.
சென்னை தமிழ்ப் பேரகராதி (பசப்புதல்): ஏமாற்றுதல், அலப்புதல்.
சென்னை தமிழ்ப் பேரகராதி (பசலை): அழகுத் தேமல்; பொன் நிறம்,
கழகத் தமிழ்க் கையகராதி (பசலை): அழகுத் தேமல், பொன்னிறம், காமநிறவேறுபாடு, மனவருத்தம், இளமை.
கழகத் தமிழ்க் கையகராதி (பசத்தல்): பசுமையாதல், நிறம் வேறுபடல், பொன்னிறமாதல்.

தற்போதைய பொருள்:
இக்காலத்தில் 'பசப்பு' என்ற சொல்லை ஒரே ஒரு பொருளில் பயன்படுத்துகின்றனர். 'சும்மா அழுது பசப்பாதே', 'அவள் ஒரு பசப்புக்காரி' ஆகிய தொடர்கள் நடைமுறையில் உள்ளவையே. இத்தொடர்களில் வரும் பசப்பு என்ற சொல் 'நடித்தல், ஏமாற்றுதல்' ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டு உள்ளது.

சொல்பயன்பாடு:
பசப்பு என்ற சொல் எந்தெந்த மேல்கணக்கு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் பயின்று வந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.
மேல்கணக்கு நூல்கள்:
அகநானூறு: பாடல்எண் -45,48,52,77,85,95,102,103,135,146,169,171,172,174,186,205, 227,229,234,235,251,253,273,307,317,329,333,347,354,359,376,379,398.
ஐங்குறுநூறு: பாடல் எண்-21,28,29,34,35,36,37,45,55,67,107,141,144,145,169,170, 200,217,219,221,222,225,227,230,231,234,242,318,366,423,424,429,455,459,477,500
கலித்தொகை: பாடல்எண்-7,15,16,25,28,32,33,36,39,42,45,48,77,82,99,100,112,125, 127,130,132,142,143,144,150
குறுந்தொகை: பாடல்எண்-13,27,48,87,121,143,183,185,205,264,303,331,339,371,381,399
நற்றிணை: பாடல்எண் - 1,35,47,50,63,73,96,108,133,151,167,175,197,219,237,244, 247,277,288,304,322,326,351,358,368,378,388
புறநானூறு: பாடல் எண் - 96, 155,159,392.
முல்லைப்பாட்டு: பாடல் எண் - 12.
ஆக மொத்தம் 142 சங்க இலக்கியப் பாடல்களில் இச் சொல் பயின்று வந்துள்ளது.

கீழ்க்கணக்கு நூல்கள்:
திணைமாலை ஐம்பது: பாடல் எண் - 4,15,22,24,47
திணைமாலை நூற்றைம்பது: பாடல் எண் - 63,116,117
கார் நாற்பது: பாடல் எண் - 4,16,25,27
கைந்நிலை: பாடல் எண் - 1,27,60
நாலடியார்: பாடல் எண் - 391;
ஐந்திணை எழுபது: பாடல் எண் - 68.
திருக்குறள்: பாடல் எண் - 1098, 1232,1238,1239,1240,1265,1278.
திருவள்ளுவர் மேற்காணும் பாடல்களில் மட்டுமல்லாது ஒருபடி மேலே போய் 'பசப்புறு பருவரல்' என்று காமத்துப் பாலில் ஒரு தனி அதிகாரமே அமைத்து இந்த பசப்பினைப் பற்றி விளக்குகின்றார். ஆக மொத்தம் 34 கீழ்க்கணக்குப் பாடல்களில் இச் சொல் பயின்று வருகிறது.

மெய்ப்பொருள்:
இச் சொல்லின் மெய்யான பொருள் 'வடிதல் அல்லது ஒழுகுதல்' என்பது ஆகும். 'அழுகை அதாவது கண்ணிலிருந்து நீர் வடிதல்' என்ற பொருளில் தான் மேற்காணும் அனைத்துப் பாடல்களிலும் இச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது எவ்வாறு சரி என்பதைக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.


நிறுவுதல்:
மேற்காணும் பாடல்களை நோக்கினால் ஏறத்தாழ அவை அனைத்தும் காதல் பற்றிய பாடல்கள் என்று அறியலாம். அதிலும் குறிப்பாக காதலன் காதலியை விட்டுப் பிரிகின்ற அல்லது பிரிந்த சூழலைப் பற்றிப் பாடுபவை. காதலன் காதலியை விட்டுப் பிரியும் போது அல்லது பிரிந்த போது காதலி என்ன செய்வாள்?. அழுது புலம்புவாள். இது தான் உலகெங்கும் இன்றளவும் நடக்கின்ற நிகழ்ச்சி. இதைத் தான் பல வழிமுறைகளில் புலவர்கள் பாடி உள்ளனர். அதை விடுத்து காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறியது என்பதோ பசுமையாகியது என்பதோ பொன்னிறமானது என்பதோ அழகுத் தேமல் உண்டானது என்பதோ நாம் எங்குமே காணாதவைகளாகும். இத்தகைய நிகழ்வுகள் உலக இயல்புக்கு ஒவ்வாதவை என்பதை நாம் நன்கு அறிவோம். இனி பசப்பு, பசலை, பசப்புதல் ஆகிய சொற்கள் யாவும் அழுகையினைத் தான் குறிக்கின்றன என்பதை கீழ்க்காணும் சில பாடல்கள் வாயிலாக இங்கே நிறுவலாம்.

ஆய்மலர் உண்கண் பசலை - அகநா.பா.எண்:52
என்செயப் பசக்கும் தோழி என் கண்ணே - ஐங்கு.பா.எண்.169
பனிமலர் நெடுங்கண் பசலை பாய - ஐங்கு.பா.எண்: 477
ஏதிலாளர்க்கு பசந்த என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 34
கொன்றைப் பூவின் பசந்த உண்கண் - ஐங்கு.பா.எண்: 500
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை - ஐங்கு.பா.எண்: 366
நயந்தோர் உண்கண் பசந்து பனிமல்க - ஐங்கு.பா.எண்: 37
ஆய்மலர் உண்கண் பசப்ப - ஐங்கு.பா.எண்: 242
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.பா.எண்: 24
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 45
பல்இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ - ஐங்கு.பா.எண்: 170
பசக்குவ மன்னோ என் நெய்தல் மலர் அன்ன கண் - கலி.பா.எண்: 142
பாடுஇன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க - கலி.பா.எண்: 16
பொன்எனப் பசந்த கண் போது எழில்நலம் செல - கலி.பா.எண்: 77
பல்இதழ் மலர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 45
அரிமதர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 82
ஆய் இதழ் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 112
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே - குறு.பா.எண்: 13
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே - நற்.பா.எண்: 35
பூப்போல் உண்கண் பசந்து - புற.பா.எண்:96
பசந்து பனிவாரும் கண் - திருக்குறள் பா.எண்: 1232
பசப்புற்றன பேதைப் பெருமழைக் கண் - திருக்குறள் பா.எண்: 1239
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே - திருக்குறள் பா.எண்: ௧௨௪0

மேற்காணும் பாடல்கள் அனைத்திலும் பசப்பு, பசலை ஆகிய சொற்கள் கண்ணுடன் தொடர்புடையனவாகக் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். அத்துடன் 'பசப்பு,பசலை, பசத்தல்' ஆகிய சொற்களுக்கு அகராதிகள் கூறுகின்ற எந்தப் பொருளும் இப் பாடல்களில் பொருந்தாமையையும் நோக்கவும். பசப்பு என்பது அழுகையைத் தான் குறிக்கும் என்று அனைவருக்கும் தெளிவுபடுத்தவே 1232 ஆம் குறளை வள்ளுவர் இயற்றி உள்ளதாகத் தோன்றுகிறது. கீழ்க்காணும் அடியினைக் காணுங்கள்.

பசந்து பனிவாரும் கண் - திருக்குறள் பா.எண்: ௧௨௩௨

'அழுது நீர் சொரியும் கண்' என்று மிகத் தெளிவாக இந்த அடி 'பசப்பு' என்ற சொல்லுக்கான பொருளைத் தந்து நிற்கிறது. எனவே பசப்பு, பசலை, பசத்தல் ஆகிய சொற்கள் அழுகைப் பொருளைத் தான் குறிக்கின்றன என்று தெள்ளிதின் அறியலாம்.

முடிவுரை:
தமிழில் 'அழுகை அதாவது கண்ணிலிருந்து நீர் வடிதலை' மட்டுமே குறித்து வந்த பசப்பு என்ற சொல் கன்னடத்தில் வெறும் 'வடிதல்' என்ற பொருளில் பயன்படலானது. சோறு சமைத்த பின்னர் அதிலிருந்து வடித்த நீரை 'பசகஞ்சி' (வடித்த கஞ்சி) என்று சொல்கின்றனர் கன்னடத்தில். இப்படி வடித்த நீர் கெட்டியானதும் ஒட்டும் தன்மை பெற்றுவிடும். இதுவே பின்னாளில் 'பசை' ஆனது.


முதலையின் கண்ணில் இருந்து வடியும் நீர் அதன் துயரத்தைக் குறிப்பதில்லை. எனவே தான் முதலைப் பசப்பு(கண்ணீர்) என்ற தொடர் ஏமாற்றுதலைக் குறித்து வந்தது. அதுவே நாளைடைவில் 'பசப்பு' என்று சிறு சொல்லளவில் சுருங்கி இன்று ஏமாற்றுதலைக் குறிக்கப் பயன்படுததப் படுகிறது.


...................................வாழ்க தமிழ்!.............................

4 comments:

  1. பசலை என்பது அழுவதோ அல்லது ஒழுகுவதோ என்று எப்படி அகும்? கலங்குவது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

    உ-ம் குறுந்தொகை 399-ல் பாசியற்றே பசலை காதலர் என்ற சொற்றொடர் அழுவதை சுட்டுவதல்ல ஆனால் கண்கள் கலங்குவதை சுட்டுவது. பாசி என்பது கேணியின் அழுகையல்லவே? பாசியுற்றால் தண்ணீர் கலங்கியிருப்பதாக அல்லவா அறிகிறோம்?

    ReplyDelete
  2. கிருஷ்ணன் ஐயா, குறுந்தொகை 399 இன் பொருள்: தொடும்போதெல்லாம் பாசி விலகி நீர் தெரிய விடும்போதெல்லாம் பாசி மூடி நீரை மறைப்பதைப் போல என் காதலர் என்னைத் தொடும்போதெல்லாம் என் கண்ணை மறைத்திருந்த கண்ணீர் விலகி அவர் என்னை விட்ட போதெல்லாம் கண்ணீர் மூடி என் கண்ணை மறைக்கிறது. பசலை என்றால் அழுகை அல்லது கண்ணீர் என்ற பொருள் இப்போது பொருந்துகிறதா?

    ReplyDelete
  3. www.Tamilers.com

    You Are Posting Really Great Articles... Keep It Up...

    We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

    தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

    அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

    தமிழர்ஸின் சேவைகள்

    இவ்வார தமிழர்

    நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

    இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

    இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

    இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

    சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

    Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
    உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

    நன்றி
    உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
    தமிழர்ஸ்
    தமிழர்ஸ் பிளாக்

    ReplyDelete
  4. அன்பு வேந்தன்சரவணன் அவர்களுக்கு,
    பண்டைக்கால வழக்கில் "நாற்றம் எங்கிருந்து வருகிறது?" என்பது பொதுவில் சுட்டப்பட்டது. ஆனால்
    இன்று வழக்கில் கெட்டநாற்றம் என ஒரு பொருளில் மட்டும் பயின்று வரும் சொல்லாக மாறிவிட்டது.
    முன்பு இலக்கியதில் பசப்பு என்ற சொல், அழுகை,கண்ணீர் என்று சுட்டிவந்தாலும் இன்று அதற்கு பொய்மை என்றும் பொருள் கொள்ளலாம்.
    எ.கா.:முதலைப்பசப்பு(முதலைக்கண்ணீர். எனவே இந்நாளில் அகராதி சுட்டும் பாசாங்கு, ஏமாற்று சரியே.
    நாட்டு வழக்கில் வயல்வெளிகளில் இன்றும் பயின்று
    வருகிறது பசப்பு.பயிரின் செழுமையான வளர்ச்சியை
    "பயிர் பசப்பாக உள்ளதே" எனும் பேச்சும், பச்சை குன்றி நோய்வாய்ப்பட்ட பயிரை, "என்ன பயிர் பசலையாக் உள்ளதே" எனும் பேச்சும் வேளாண்மக்கள் கூறுவதுண்டு.
    சொல்வழக்கு முந்தியது, அகராதி பிந்தியது.சொல்வழக்கு காலத்தால் தாக்கம் பெரும், அதற்கு ஏற்ப அகராதி ஆக்கம் பெரும்.
    எனவே இலக்கிய வழக்கில் பசப்பு ஓர் பொருளைச் சுட்டினாலும் காலத்தால் சொல்வழக்கு புதுப்பொருள்
    பெருவது வளர்ச்சியே.
    முடிவாக, இலக்கியப்பசப்பும், இற்றையபசப்பும் தமிழுக்குத் தேவையே.
    அன்புடன்,
    மீ.க.

    ReplyDelete