பாடல்:
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
- குறள் எண்: 9
தற்போதைய விளக்கம்:
கலைஞர் உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வ உரை: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா உரை: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
தவறு:
இக் குறளுக்குக் கூறப்பட்டிருக்கும் உரைகளில் 'கோள்,பொறி,தலை' ஆகிய மூன்று சொற்களுக்குத் தவறான பொருள்களைக் கூறியுள்ளனர். இம்மூன்று உரைகளில் கலைஞரின் உரை முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் காணுங்கள். அவர் 'எண்குணத்தான்' என்ற சொல்லிற்கு 'ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவன்' என்று பொருள் கூறுகிறார். இப்பொருள் இச் சொல்லிற்குப் பொருந்தாது என்று அறிஞர்கள் அறிவர். எனவே இந்த உரை தவறானது என்று தெளியலாம். அத்துடன் இந்த மூன்று விளக்கங்களையும் ஒப்புநோக்கினால் ஓர் உண்மை புரியும். இவை அனைத்திலுமே 'தலை' என்ற சொல் 'மண்டை' யைக் குறிப்பதாகவும் 'பொறி' என்ற சொல் மனித உடலின் ஐம்பொறிகளைக் (கண், காது, மூக்கு, வாய், மெய்) குறிப்பதாகவும் 'கோள்' என்ற சொல் இப்பொறிகளின் மூலம் நாம் பெறுகின்ற ஐம்புலன்களைக் (காட்சி, ஒலி, வாசனை, சுவை, தட்பவெப்பம்) குறிப்பதாகவும் கொள்ளப்பட்டு அதற்கேற்ப குறளுக்கு உரை கூறப்பட்டு உள்ளது. மு.வ மற்றும் பாப்பையா உரைகளில் 'இறைவனை வணங்காதவனின் தலையானது இயக்கம் அற்ற ஐம்பொறிகளைப் போல பயனற்றது' என்று கூறப்பட்டு உள்ளது. இப்படி ஒரு கருத்தினை வள்ளுவர் இங்கே கூறி இருப்பாரா?. என்பதே இங்கு எழுகின்ற கேள்வி. வள்ளுவர் அவ்வாறு கூறி இருக்க முடியாது என்பதே இக் கட்டுரையின் துணிபு ஆகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.
இவ்வுலகில் வாழும் உயிர்கள் யாவும் இறைவனின் படைப்புக்களே ஆகும். இப் படைப்புக்களில் காது கேளாதோரும் வாய்பேச இயலாதோரும் காண இயலாதோரும் மூளை வளர்ச்சி குன்றியோரும் உண்டு. இயக்கம் அற்ற இப்பொறிகளை உடைய இம் மக்களின் குறைபாடுகளுக்கு யார் காரணம்?. இவர்களைப் படைத்த இறைவன் தானே காரணம். எனில் இவர்களைக் குறைகூறுவதோ இழிவுபடுத்தும் வகையில் மேற்கோள் காட்டுவதோ அறச் செயல் ஆகாதன்றோ?. இப்படி இருக்க 'இறைவனை வணங்காதவனின் தலையானது இயக்கம் அற்ற பொறிகள் போலப் பயனற்றது' என்று மேற்கோள் காட்டினால் அது அறமல்லாத செயல் மட்டுமின்றி இறைவனின் படைப்பினை அதாவது இறைவனையே இழிவுபடுத்துவது போல ஆகிவிடுமே. இறைவனை வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தினையும் அறச் சிந்தனைகளையும் உடைய வள்ளுவப் பெருமான் இப்படி இழிவுபடுத்திக் கூறுவாரா?. ஒருபோதும் கூறமாட்டார். எனவே இப்பாடலில் வரும் 'கோள்' என்ற சொல் 'ஐம்புலனையும்' 'பொறி' என்ற சொல் 'ஐம்பொறியையும்' 'தலை' என்ற சொல் 'மண்டை' யினையும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
திருத்தம்:
இக் குறளில் வரும் 'கோள், பொறி, தலை' ஆகிய சொற்களுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கே 'கோள்' என்னும் சொல் 'வலிமை (வீரம்)' யினையும் 'பொறி' என்ற சொல் 'செல்வத்தினையும்' 'தலை' என்ற சொல் 'தலைவனையும்' குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும்.
(ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி, வின்சுலோ இணையத் தமிழ் அகராதி).
நிறுவுதல்:
'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் இறைவனின் புகழ் கூறவந்த வள்ளுவர் இந்தக் குறளை ஒன்பதாம் பாடலாக அமைத்திருக்கிறார். இவ்வாறு அமைத்ததற்கும் 'எண்குணத்தான்' என்று இறைவனை இக்குறளில் வள்ளுவர் புகழ்வதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று ஆராய்ந்ததில் ஒரு கருத்து முகிழ்த்தது. அது இது தான்: முதல் எட்டுப் பாடல்களில் பாடலுக்கு ஒரு குணமாக இறைவனின் எட்டு குணங்களையும் பாடிய வள்ளுவர் ஒன்பதாம் குறளில் இறைவனை 'எண்குணத்தான்' என்று போற்றுகிறார். என்னே வள்ளுவரின் புலமை!. மிகவும் அருமை அன்றோ?. இனி வள்ளுவர் கூறும் இறைவனின் எட்டு குணங்களைப் பார்ப்போம்.
குறள் 1: இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்)
குறள் 2: இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்)
குறள் 3: இறைவன் அண்டவெளியினைக் கடந்தவன் (பெருமைக் குணம்)
குறள் 4: இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்)
குறள் 5: இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்)
குறள் 6: இறைவன் ஐம்பொறிகளையும் அடக்கியவன் (வலிமைக் குணம்)
குறள் 7: இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்)
குறள் 8: இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்)
இப்படி எட்டு குணங்களைக் கொண்டு குணக்குன்றாக விளங்கும் இறைவனை 'எண்குணத்தான்' என்று போற்றிய வள்ளுவர் இந்த எண்குணத்தானை வணங்காத ஒருவன் மக்கள் தலைவனாகவே இருந்தாலும் அவனுடைய வீரமும் செல்வமும் பயன்படாது என்கிறார். இது எவ்வாறெனில் கல்வி அறிவு (நுண்மைக் குணம்), வீரம் (வலிமைக் குணம்), செல்வம் (பெருமைக் குணம்) ஆகிய மூன்றையும் உடைய உலகத்தின் ஒரே தலைவனான இறைவனிடமிருந்து உயிர்கள் கொடையாகப் பெறுவதே கல்வியும் வீரமும் செல்வமும் ஆகும். அப்படி பெற்ற பின்னர் அந்த இறைவனையே வணங்க மறுத்தால் அது நன்றி மறப்பது போலத்தானே. செய்ந்நன்றி கொன்றவற்கு உய்வில்லை அல்லவா?. அதனால் தான் அவை பயன்படாது என்கிறார்.
மனித வாழ்விற்கு இன்றியமையாத செல்வங்களான கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றில் இறைவனை வணங்காதவரின் கல்வி அறிவு பயன்படாது என்று இரண்டாவது குறளில் விளக்கிய வள்ளுவர் இக்குறளில் வீரமும் செல்வமும் இறைவனை வணங்கா விட்டால் பயன்படாமல் போய்விடும் என்கிறார். என்னே வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம்!.
சரியான பொருள்:
' எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை
வணங்காத தலைவனின் வலிமையும் செல்வமும் பயனற்றவையே.'
..............................வாழ்க தமிழ்! ....................................
/மனித வாழ்விற்கு இன்றியமையாத செல்வங்களான கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றில் இறைவனை வணங்காதவரின் கல்வி அறிவு பயன்படாது/
ReplyDeleteஇளமுனைவரே உங்கள்ஆய்விற்கு நன்றி. மேற் கூறிய
கருத்துக்களால் மு.வ அவர்களும், சாலமன் பாப்பையா அவர்களும் பெருமைப்படுத்திய குறளை
தன் எடுபிடி அரசியலுக்குத் துணைபோகவும், தனக்குத்
துணைபோகவும் தக்கதாக மாற்ற முயன்ற அரசியல் வியாபாரி மு. கருணாநிதி.தயவுகூர்ந்து அவரும் ஒரு ஆய்வுரை எழுதினார் என்று குறிப்பிட்டு அருமந்த தமிழ்மருந்தாம் திருக்குறளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
தமிழ்சித்தன்
keep it up.
ReplyDeleteTamilsiththan
மிக நன்றாக எழுதிஇருக்கிறீர்கள். தொடர வேண்டும் உங்களது தமிழ் பணி. வாழ்த்துகிறேன்!
ReplyDelete