வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இன்றைய குறள்:-

Friday, April 3, 2009

' உயிர் பிணித்த காதல் '


பாடல்:

' இடிக்கும் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோம் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.'
- குறுந்தொகை பாடல் எண்: 58.

பொருள்:

இடித்துரைக்கும் நண்பினரே! (எனது குறையினை) உமது குறையாக (க்கருதி அதனை முடிப்பீர் என்று) எண்ணி இதுகாறும் (எனதுயிரைப் போகாது தடுத்து) நிறுத்தினேன். (இவ் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது அன்றி எனக்கு நீர் செய்யும்) நன்மை வேறு ஒன்றும் இல்லை. சூரியன் வெயில் எறிப்பதால் வெப்புற்ற பாறையின் மேல் வைக்கப்பட்டு இரண்டு கையும் இல்லாதவனும் ஊமையனுமான ஒருவனால் கண்பார்வையால் மட்டும் காக்கப்படும் காய்ந்து உருகி ஓடிய வெண்ணெயைப் போல இக்காம நோய் என் உடலெங்கும் பரவி விட்டது. இனிப் பொறுக்க முடியாது.'
நன்றி: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002.

தவறுகள்:

இப்பாடலின் முதல் அடியில் ஒன்றும் இறுதி அடியில் ஒன்றுமாக இரண்டு தவறுகள் உள்ளன.இவற்றைக் காணும் முன்னர் இப்பாடலின் பின்புலத்தைப் பற்றிக் காணலாம். வெள்ளிவீதியார் என்னும் புலவரால் பாடப்பட்ட இப்பாடல் ஒரு தலைவன் கூற்று ஆகும் அதாவது காதல் கொண்ட ஒரு காளை தனது நிலையினை நண்பர்களிடத்தில் எடுத்துக் கூறுவது. ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல் கொள்கிறான் ஒரு காளை. அவளும் அவனைக் காதலிக்கிறாள். இடையில் அப்பெண்ணைப் பல நாட்களாக சந்திக்க முடியவில்லை அவனால். அவளைக் காணமுடியாமல் தவிக்கிறான் காளை. தனது காதலை நண்பர்களிடத்தில் எடுத்துக் கூறி தன்னுடன் அவளைச் சேர்த்துவைக்குமாறு கூறுகிறான். அவர்களும் பலவாறு முயன்று பார்க்கின்றனர். ஆனால் முடியவில்லை. அவளின் பிரிவால் அவனது உடல்நலம் குன்றுகிறது. அந்தப் பெண்ணை மறந்துவிடுமாறு அவனை வேண்டுகின்றனர் அவனது நண்பர்கள். இந்தச் சூழ்நிலையில் தான் அந்தக் காளை அவர்களை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலின் முதல் சொல்லாக 'இடிக்கும்' என்ற சொல் வந்துள்ளது. இதற்கு 'கண்டிக்கும்' என்று பொருள். இங்கே இச்சொல்லும் பொருளும் பொருந்தாதவை ஆகும். ஏனென்றால் ஏற்கெனவே உடல்நலம் குன்றி சோர்ந்த நிலையில் உள்ள அவனுக்கு ஆறுதல் கூறுவதை விடுத்து கண்டிப்பது அறிவுடையோர் செய்யும் செயல் ஆகுமா?. கண்டிப்பது என்றால் அவன் தனது காதலை வெளிப்படுத்திய அன்றே அல்லவா செய்திருக்க வேண்டும்?. இவ்வளவு நாள் முயற்சி செய்துவிட்டு சேர்த்துவைக்க முடியாத நிலையில் அவனைக் 'கண்டித்தார்கள்' என்று கூறுவது பொருந்தாத கருத்தாகும். இதில் இருந்து இந்தச் சொல்லும் பொருளும் இவ்விடத்தில் தவறாக வந்துள்ளது என்பதை அறியலாம்.

பாடலின் இறுதி அடியில் 'பரந்தன்று' என்ற சொல் வந்துள்ளது. இதற்கு 'பரவியது' என்று பொருள். 'பரந்தன்று இந்நோய்' என்பதற்கு 'இந்தக் காதல் நோய் என் உடலெங்கும் பரவி விட்டது' என்று பொருள் கூறுவது அறிவுக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தலையில் தோன்றி கால்வரை பரவும் தோல்வியாதி அல்ல காதல். உடலெங்கும் பரவுதல் என்னும் பொருள் காதலுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் காதல் ஒரு உடல் நோய் அல்ல; அது ஒரு மன உணர்வு ஆகும். அந்த உணர்வினால் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. காதல் துன்பம் தரும் நோயாகும்போது அதற்கு மருந்தும் காதலே ஆகும். எனவே 'பரவிவிட்டது' என்ற பொருளைத் தரும் 'பரந்தன்று' என்ற சொல் இங்கே தவறாக வந்துள்ளது என்பதை அறியலாம்.

திருத்தங்கள்:

'இடிக்கும்' என்ற சொல்லுக்கு பதிலாக 'இரக்கும்' என்று வந்திருக்க வேண்டும். இரத்தல் என்றால் வேண்டுதல், யாசித்தல் என்று பொருள். 'அந்தப் பெண்ணை மறந்துவிடு' என்று யாசிப்பதாகக் கொள்வதே சரியான பொருள். இதுவே இந்த இடத்தில் பொருத்தமாகும். இறுதி அடியில் வரும் 'பரந்தன்று' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பிணித்தன்று' என்று வந்திருக்க வேண்டும். பிணித்தல் என்றால் தன் வசப்படுத்துதல், தன்னுடன் சேர்த்துக்கட்டுதல் என்று பொருள். 'பிணித்தன்று இந்நோய்' என்னும் சொற்றொடருக்கு 'இந் நோய் என் உயிரை தன் வசப்படுத்திவிட்டது.' என்பது பொருள். இதுவே இவ் இடத்தில் பொருந்துகின்ற பொருளாகும்.

நிறுவுதல்:

முதலில் 'இரத்தல்' பற்றிக் காண்போம். அவனது நண்பர்கள் அவன் விரும்பிய படியே அப்பெண்ணைச் சேர்த்துவைக்க முதலில் முயன்றனர். இயலாமல் போகவே அவனிடம் வந்து 'அப்பெண்ணை மறந்துவிடு' என்று யாசிக்கின்றனர். இதைத்தவிர அவர்களால் வேறு என்ன செய்யமுடியும்?. மோசமான உடல்நிலையில் உள்ள அவனிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள யாருக்கு மனம் வரும்?. எனவே 'யாசிக்கும்' என்னும் பொருள்படுகின்ற 'இரக்கும்' என்னும் சொல்லே இந்த இடத்தில் மிகப் பொருத்தமானது என்பதை அறியலாம்.


அடுத்து 'பிணித்தல்' பற்றிக் காணும் முன்னர் இப்பாடலில் வரும் ஒரு அரிய செய்திக் குறிப்பைக் காணலாம். இக்காலத்தில் இறைச்சியை 'உப்புக்கண்டம்' போடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் இறைச்சியை 'நெய்க்கண்டம்' போடுவார்கள். 'வெண்ணெய் உணங்கல்' என்பது இதைத்தான் குறிக்கிறது. ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணெயை ஊற்றி அதில் இறைச்சித் துண்டுகளைப் போட்டு வெயிலில் காயவைப்பர். வெண்ணெய் உருகி நெய்யாகி நன்றாக சூடேறி இறைச்சிக்குள் ஊடுருவும். இப்படி ஊறவைக்கும் பொழுது பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க யாராவது ஒருவர் காவலுக்கு இருப்பர். இப்படி நெய்யில் ஊறவைத்த இறைச்சிக்கு 'நெய்யூன்' என்றும் பெயர். இப் பெயர் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது. இந்த அரிய செய்தி இப்பாடலில் ஒரு அழகான உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

கைகள் இல்லாத ஊமையன் ஒருவனை நெய்க்கண்டத்தைக் காவல் காக்க வைத்ததாகப் பாடலில் வருகிறது. இப்படிச் செய்வதால் என்ன ஆகும்?. தடுப்பார் யாருமின்றி அந்த நெய்க்கண்டம் பறவைகளாலும் விலங்குகளாலும் மிக எளிதாகக் கவரப்படும் அல்லவா?. அப்படித் தான் இங்கே தலைவனது உயிரும் ஆனது. உயிருக்குயிரான காதலியைச் சேர்த்து வைத்து தனது உயிரைக் காப்பாற்ற இயலாத நண்பர்களை 'கையில் ஊமன்' என்று நோகிறான் காதலன். காதலியைத் தூக்கி வந்து தன்னுடன் சேர்த்துவைக்காததால் 'கைகள் இல்லாதவர்கள்' என்றும் அவளது பெற்றோரிடம்/தோழிகளிடம் சென்று பேசி மணம் முடித்து வைக்க இயலாததால் 'வாய் பேச முடியாத ஊமைகள்' என்றும் கூறுகிறான். இப்படிக் கையில் ஊமன் போல அவனது நண்பர்கள் நடந்து கொண்டதால் நெய்க்கண்டம் போன்ற அவனது உயிரைக் காதல் நோய் தன்வசப் படுத்திக் கொண்டது. இந்தச் சூழ்நிலையில் 'பிணித்தல்' என்ற பொருள் தான் இங்கே பொருத்தமாக இருக்குமே அன்றி 'பரவுதல்' பொருள் பொருந்தாது அல்லவா?. அத்துடன் ஒவ்வொரு அடியிலும் எதுகை நயம் பயின்று வருவதற்கேற்ப 'வெண்ணெய்' என்னும் சொல்லுக்கு 'பிணித்தன்று' என்ற சொல் எதுகையாக வருவதும் இங்கே குறிப்பிடத் தக்கது. எனவே 'பிணித்தன்று' என்ற சொல்லே இங்கே மிகப் பொருத்தமாகும் என்பது தெளிவு.

இனி சரியான பொருள் இது தான்: '(மறந்துவிடு என்று என்னிடம்) யாசிக்கும் நண்பர்களே! நீங்கள் கடமையை நிறைவேற்ற (என் உயிரைப்) பொறுத்து இருந்தேன். நல்லது, இனி அது ஆவதற்கில்லை. கதிரவன் காய்கின்ற வெம்மை மிக்க பாறையின் மேல் கைகள் இல்லாத ஊமையன் ஒருவன் கண்களால் காத்த நெய்க்கண்டம் போல இந்தக் காதல் நோய் தன் வசப்படுத்திக் கொண்டதால் (என் உயிரைப்) பொறுத்திருப்பது அரிதாகும்.'

சரியான பாடல்:

' இக்கும் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோம் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பிணித்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.'

-------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------------

4 comments:

  1. வணக்கம் நண்பரே
    சங்க இலக்கியத்தில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டுக்கு வாழ்த்துக்கள்.
    ஏற்கனவே சங்கஇலக்கியத்தில் பாடபேதங்கள் மிகுதி.அதிலும் தங்களைப் போல ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ப சொற்களை மாற்றினால்.சங்க இலக்கியத்தின் நிலை என்னாவது.இப்பாடலுக்கு தக்க சான்றுகளுடன் தங்கள் கருத்தைக் கூறியிருந்தால் மகிழ்வேன்.

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.

    என்பர் வள்ளுவர்.நண்பன் தவறு செய்யும் போது இடித்துரைத்தல் என்பதும் சங்க கால மரபு தான்.

    காதல் துன்பம் தரும் நோயாகும் எனத் தாங்களே தங்கள் கட்டுரையில் கூறியுள்ளீர்கள், ஆகத் துன்பமும் ஒரு உணர்வுதானே.அந்த உணர்வு காதலில் இயல்பானது. இப்பாடலுக்கு

    பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.'
    என்பது மிகவும் சரியாகத்தான் உள்ளது.

    காதல்
    இவ்வுணர்வு தலைவனுக்கு மட்டுமே உரியது.அவ்வுணர்வை நண்பன் உணர்ந்து கொள்ளமுடியாது.....
    வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து சங்கஇலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதுக.

    ReplyDelete
  2. கருத்துக்கு மிக்க நன்றி திரு.குணசீலன் அவர்களே! காதல் நோய் பரவியது என்று கூறுவது தான் தவறு என்கிறேன். பரவுவதற்கு காதல் ஒரு தோல் நோயோ தொற்று நோயோ அல்லவே! பிணித்தல் என்பதே காதல் நோய்க்கு ஏற்ற சொல். இடித்தல் நன்று தான் ஆனால் நண்பனின் உடல்நிலை மோசமாய் இருக்கும்போது அதைச் செய்தால் எதிர்மறை விளைவுகள் அல்லவா ஏற்படும்?

    ReplyDelete
  3. கேளிர் என்ற சொல்லுக்கு உறவினர் மற்றும் நண்பர் என்ற பொருளுண்டு. இவ்விருவருக்கும் தான் இடித்துரைக்கும் உரிமையும் உண்டு. நல்லதை மட்டுமே நினைக்கும் இவர்களுக்கு இடிக்கும் உரிமையும் உண்டு. எனவே இடித்தாலும் சரியே.

    கிருஷ்ணமாச்சாரி அவ்வை தமிழ்ச் சங்கம்

    ReplyDelete
  4. /காதல் நோய் பரவியது என்று கூறுவது தான் தவறு என்கிறேன். பரவுவதற்கு காதல் ஒரு தோல் நோயோ தொற்று நோயோ அல்லவே!/

    என்று தங்கள் கருத்துரையில் கூறியுள்ளீர்கள்....

    தோல் நோயும் தொற்று நோயும் மட்டுமே உடலில் பரவும் என்றில்லை . காதலும் ஓர் நோய் தான் இதுவும் உடலில் பரவும் தன்மையது தான் இதனை அறிவியலாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    காதல் நோய் பரவக்காரணமானது ஹார்மோன்கள் தாம்.
    இவை தாம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.


    இது அறிவியல் ஒப்பிய முடிவு...

    இந்த மாற்றம் தான் இன்று வரை காதல் என்னும் உணர்வு இம்மண்ணில் நிலவக்காரணமாகவுள்ளது.

    ஊருண்கேணி யுண்டுறை தொக்க பாசியற்றே பசலை
    காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி
    விடுவுழி விடுவுழிப் பரத்தலானே

    என்ற பாடலைத் தாங்கள் அறிவீர்கள்.

    காதலன் பிரிந்தவுடன் உடலில் பசலை வந்து விடுகிறது.அவன் அருகிலிருக்கும் போது நீங்கிவிடுகிறது.
    இது போல நிறைய பாடல்களைக் கூறலாம்...


    காதல் மனதிலும் உடலிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை நம் முன்னோர்கள் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

    ReplyDelete