வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இன்றைய குறள்:-

Saturday, April 11, 2009

' மாயோன் மேய '


பாடல்:

' மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:௫5

பொருள்:

' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

தவறுகள்:

இப்பாடலின் முதல் வரியில் 'காடுறை' என்ற சொல்லில் 'டு' என்ற எழுத்துப்பிழையும், நான்காம் வரியில் 'பெருமணல்' என்ற சொல்லில் 'ண' என்ற எழுத்துப் பிழையும் உள்ளது. இவை எவ்வாறு பிழைகள் ஆகின்றன என்று காணும் முன்னர் இப்பாடலில் உள்ள நயங்களைக் காணலாம்.

தொல்காப்பியர் ஒவ்வொரு உலகத்தின் பெயரையும் நேரிடையாகக் கூறாமல் மறைமுகமாக உணரும் வண்ணம் இப்பாடலை இயற்றி உள்ளார். மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம் (மைவரை உலகம்) என்று மலையினையும், இனியநீரைக் கொண்ட உலகம் (தீம்புனல் உலகம்) என்று வயலையும் பெரும் ஓசையினைக் கொண்ட உலகம் (பெருமதில் உலகம்) என்று கடலையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு மற்ற மூன்று உலகங்களின் பெயர்களை மறைமுகமாகக் கூறுபவர் காட்டை மட்டும் நேரடியாகக் கூறுவாரா?. 'காடுறை உலகம்' என்பதில் அந்த உலகத்தின் பெயராகிய காடு என்னும் சொல் வெளிப்படையாக வந்துள்ளது. இவ்வாறு வருவது பிழை ஆகும். அன்றியும் ஒவ்வொரு உலகத்தைக் குறிப்பிடும் போது அந்த உலகத்தில் உள்ள சிறப்புப் பொருளைக் கூறி அதன் மூலம் அந்த உலகத்தின் பெயரை உணர வைப்பது தான் தொல்காப்பியரின் உத்தி என்பதால் காட்டு உலகத்தில் உறையும் ஏதோ ஒன்றைக் குறிப்பிடவே 'கா..றை உலகம்' என்கிறார். மேலும் 'காடுறை' என்ற சொல்லுக்கு 'காடு உறையும்' என்று பிரித்துப் பொருள் கொண்டாலும் அது பிழையாகவேத் தோன்றுகிறது. ஏனென்றால் காடு என்பது ஒரு வகை நிலம். அது எங்கே உறையும்?. எனவே 'காடுறை' என்னும் சொல்லில் பிழை உள்ளதை அறியலாம்.

அடுத்து நான்காம் வரியில் வரும் 'பெருமணல் உலகம்' என்பதற்கு ' பெரும் மணற்பரப்பை உடைய உலகம்' என்பது பொருள் ஆகும். மணற்பரப்பு என்பது கடலுக்கு மட்டுமின்றி ஆற்றுக்கும் உரியது. 'பெரும் மணற்பரப்பினை உடைய உலகம்' என்று கூறினால் அது கடலையும் குறிக்கும் ஆற்றையும் குறிக்கும். இதனால் நெய்தலா மருதமா என்ற நில மயக்கம் ஏற்படும் என்பதால் தொல்காப்பியர் இப்படி ஒரு பொதுவான சொல்லைக் (மணல்) கூறி இருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும். 'தீம்புனல் உலகம்' என்று ஏற்கெனவே மூன்றாம் வரியில் மருதத்தைக் கூறி விட்டாரே பின்னர் என்ன குழப்பம்? என்ற கேள்விக்கு விடை இது தான்: 'தொல்காப்பியர் சிறந்த அறிவாளி. இலக்கண விதிகளை வகுத்து மொழி வழக்கில் தெளிவு ஏற்படச்செய்த பெருந்தகையாளர். அவர் தனது நூலில் பொருள் குழப்பம் ஏற்படும்படியான சொற்களைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்'. எனவே 'பெருமணல்' என்ற சொல் பிழையானது தான் என்பதை அறியலாம்.

திருத்தங்கள்:

'காடுறை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கானுறை' என்று இருக்க வேண்டும். கானுறை = கான்+உறை. கான் என்றால் வாசனை என்று பொருள். 'கானுறை உலகம்' என்றால் 'வாசம் உறையும் உலகம்' அதாவது காடு என்று பொருள். 'பெருமணல்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பெருமதில்' என்று வந்திருக்க வேண்டும். மதில் என்ற சொல்லுக்கு 'ஓதை அதாவது அலைஓசை' என்று பொருள். (நன்றி: பிங்கல நிகண்டு - பாடல் எண்: 628).'பெருமதில் உலகம்' என்றால் 'பெரும் ஓசையினை உடைய உலகம்' அதாவது கடல் என்று பொருள்.

நிறுவுதல்:

இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் நிலப்பாகுபாடு மட்டுமே தெரியும். ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தொல்காப்பியரின் நுண்ணறிவும் அழகியல் நோக்கும் புலப்படும். நிலத்தை அடையாளம் காட்ட அவர் எடுத்துக் கொண்ட பொருள்கள் மிக அருமையானவை; அவற்றைப் பயன்படுத்தி அவர் விளக்கியுள்ள தன்மையோ அதிசயக்கத் தக்கது. நிலங்கள் ஐந்து என்பதைப் போல நம் புலன்களும் ஐந்து. ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு புலனுக்கு இன்பம் தரவல்லது என்னும் கருத்தில் பாலை நீங்கலான ஏனை நான்கு நிலங்களில் உள்ள சிறப்புப் பொருட்கள் மெய் நீங்கலான ஏனை நான்கு புலன்களுக்கு எவ்வாறு இன்பம் தரவல்லது என்று இப்பாடலில் கூருகிறார். அவ்வாறு கூறுவதன் மூலமாகவே அந்தந்த நிலத்தின் பெயரையும் அறியச் செய்கிறார். தொல்காப்பியரின் இந்த உத்தி கீழே விளக்கப்பட்டுள்ளது.

கண்களைக் கட்டிவிட்டு ஒருவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுங்கள். எதையும் பார்க்காமலேயே அது ஒரு காடு என்று அவரால் கூறிவிட முடியும். எப்படி?. காடு என்பது பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய நந்தவனம்; இந்த மலர்களின் வாசமும், இலைகள், கொடிகள் மற்றும் பழங்களின் வாசமும் இணைந்து காட்டிற்குள் நுழைபவரைத் தன் வாசனையால் வரவேற்கும். இந்த வாசனைக்கு 'கான்' என்றொரு பெயர் உண்டு. கான் உடையதால் காட்டிற்கு 'கானகம் (கான்+அகம்)' என்றொரு பெயரும் உண்டு. காட்டிற்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை உணர்ந்த தொல்காப்பியர் 'காடு' என்று நேரடியாகக் கூறாமல் 'வாசம் உறையும் உலகம்' என்று பொருள்படும்படி 'கான் உறை உலகம்' என்று முதல் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் மூக்கிற்கு இனிய வாசனையைத் தருவதாக முல்லை நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.


கருமையாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் மேகங்களின் அழகே தனி தான். இதில் வெண்மேகங்கள் கரிய நிற மலைகளின் மேல் வெண்ணிற ஆடை போலப் படிந்திருக்குமே அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? நீங்கள் கண்டிருக்கிறீர்களோ இல்லையோ தொல்காப்பியர் இக்காட்சியைக் கண்டு தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பாருங்கள், 'மலை' என்று கூறாமல் 'மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம்' என்று இரண்டாம் வரியில் (மை = மேகம்; வரை = எல்லை) எவ்வளவு நயமாகச் சொல்லுகிறார். அன்றியும் சில நேரங்களில் மலையே தெரியாத அளவுக்கு மேகங்கள் மூடியிருக்கும். ஆனாலும் அங்கே மலை இருப்பதை ஒருவர் தூரத்தில் இருந்துகொண்டே அங்கிருக்கும் மேகக்கூட்டத்தை வைத்து அடையாளம் காணமுடியும். ஐம்புலன்களில் கண்ணுக்கு இனிய காட்சியைத் தருவதாக குறிஞ்சி நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

முல்லையை வாசனையாலும் குறிஞ்சியை மேகக்காட்சியாலும் அறிந்துகொள்வது போல மருதநிலத்தை அங்கே உள்ள நீரின் சுவையால் அறிந்து கொள்ளலாம். இனிய சுவையினை உடைய நீர் மருத நிலத்தின் சிறப்புப் பொருள் ஆகும். ஆறு,குளம்,ஏரி,கிணறு என்று பலவகையான நீர்நிலைகளை உடைய மருதநிலத்தை 'தீம்புனல் உலகம்' என்று ஐம்புலன்களில் நாவிற்கு இனிய நீரினால் அறியவைத்த பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.


கடற்கரைக்குச் சென்று அமர்ந்துகொண்டு கண்களை மூடியவாறு கடல் அலைகளின் ஓசையைத் தொடர்ந்து கேட்டிருக்கிறீர்களா?. அது ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும். அந்த ஓசையில் உலகத்தை மறந்து உங்கள் மனம் ஒருமைப்படும். கடல் அலைகளின் இந்த ஓசைக்கு 'ஓதை' என்று பெயர். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் அருகில் கடல் இருப்பதை இந்த ஓதையால் ஒருவர் அறிந்துகொள்ளமுடியும். கடலுக்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை அறிந்த தொல்காப்பியர் 'கடல்' என்று நேரடியாகக் கூறாமல் 'பெரும் ஓசை உடைய உலகம்' என்று பொருள்படும்படி 'பெருமதில் உலகம்' என்று நான்காம் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் காதிற்கு இனிய ஓசையைத் தருவதாக நெய்தல் நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

தொல்காப்பியர் கையாண்டுள்ள இந்த உத்தி எவ்வளவு நேர்த்தியானது என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் இருந்து இப்பாடலின் சரியான பொருளையும் அறிந்திருப்பீர்கள். அது இது தான்: ' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய வாசனை உறையும் உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெரும் ஓசையினை உடைய உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

சரியான பாடல்:

' மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.'
----------------------------------வாழ்க தமிழ்!--------------------------------------

5 comments:

  1. vanakkam Ayya Ungal Thiruthaam Miga Sirappaga Ullathu...
    Atharkana Vilakkam Migayum Thelivaga Irrukirathu..

    Kuraigal:
    1)Karuthurai yil Tamil il "type" Seiya iyalavillai..
    2)"labelgal" Villaigal
    Nanri

    ReplyDelete
  2. நன்றி குமரேசல் அவர்களே. உங்கள் கருத்துக்களின் படி தமிழில் கருத்துக்களை அச்சிட 'தமிழில் அச்சிடலாம்' பகுதியை இணைத்துவிட்டேன். அதில் தமிழில் அச்சிட்டு நகல் செய்து இங்கே ஒட்டிக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

    ReplyDelete
  3. அன்புள்ள சரவணன் அவர்களுக்கு, வணக்கம்.
    தொல்காப்பியத்தில் உள்ள நிலப்பாகுபாடுகளைப் பாராட்டியும் அதில் தேவைப்படும் திருத்தங்களைப் பகுத்தாய்ந்து சொல்லியுள்ள உங்களின் திறமை பாராட்டுக்குரியது. வாழ்க நின் தமிழ்ப்பற்று. வளர்க நின் மொழித் தொண்டு.
    அன்புடன்,
    முனைவர் தி.நெடுஞ்செழியன்

    ReplyDelete
  4. சரவணன் வழகக்ம் போல் மாறுபட்டு சிந்திக்கிறீர்கள்.
    ஆனால் தவாறாகவே சிந்திக்கிறீர்கள். ஆயினும் சிந்திப்பதற்காவே என் பாராட்டுகள்.

    காடு எல்லாக்காலங்களிலும் மணம் பெறாது. அது முறைதிரிந்து பாலையும் ஆகுமே.

    வரை என்றல மலை. கருமையான மலை

    வருபுனல். பெருமணல் என ஓசைநயம் பொருந்தி வருகின்றன.

    கடற்கரைகள்தாம் மணல் பரப்பாக உள்ளன. ஆற்றங்கரைகள் அப்படி இல்லை. நீங்கள் ஆற்றுக்குள் உள்ள மணலை கருதுகிறீர்கள்.

    வானவராயன்

    ReplyDelete
  5. வானவராயன் அவர்களுக்கு மிக்க நன்றி. காடு மட்டும் அல்ல நால்வகை நிலங்களும் தம் இயற்கையில் திரிந்தால் அது பாலை எனப்படும். இதை தொல்காப்பியரும் அறிவார். அவர் இங்கே சொல்லவருவது காடு பற்றிய கருத்து. எனவே பாலையுடன் குழப்பவேண்டாம்.

    வரை என்றால் எல்லை என்ற பொருளும் உண்டு.

    வருபுனல் என்ற சொல்லே பாடலில் இல்லையே. பின்னர் எப்படி ஓசைநயம் வருகிறது என்கிறீர்கள்?

    ஆற்றங்கரையில் மணலை நீங்கள் பார்த்தது இல்லையா?

    ReplyDelete